சென்னை: மந்தவெளி பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை கூறி அரசியலுக்கு வருவதை தவிர்த்து உள்ளார். அவர், இன்று போல் என்றும் வாழ வேண்டும். ரஜினிகாந்தால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் அதிமுகவிற்கு வாக்களிப்பர்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய கட்சி பிரச்னைகளை மறைக்க அதிமுக குறித்து பேசி வருகிறார். அதிமுகவில் தொண்டர்கள் கூட முதலமைச்சர் ஆகலாம். திமுகவில் ஒரு சிலரின் புகைப்படங்கள் மட்டுமே கட்சி போஸ்டரில் இடம் பெறவேண்டும் என்று வெளியிடப்பட்ட அறிக்கை, மற்ற மூத்த தலைவர்கள் வளர்ந்து விடுவார்கள் என்ற அச்சத்தால் வெளியிடப்பட்டது போல் உள்ளது.
பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வரும் டோக்கனில் இரட்டை இலை சின்னம் பொருத்தப்படவில்லை, ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட போது கட்சியின் சின்னம் பொருத்தப்பட்டு வழங்கப்பட்டது. அமைச்சர்கள் அரசாங்கத்தை சார்ந்தவர்கள். எனவே டோக்கன்களில் அவர்கள் பெயர் இருப்பதில் தவறில்லை. இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் காழ்ப்புணர்ச்சியால் திமுக பொங்கல் பரிசை திசை திருப்ப நினைக்கிறது.
அதிமுகவையும் அதன் சின்னத்தையும் முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. அதிமுகவை பிரிக்க பல்வேறு நபர்கள் முயற்சி செய்தும் அசைக்க முடியவில்லை. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும், அவரால் எந்த பாதிப்பும் அதிமுகவில் ஏற்படாது" என்றார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் : திமுக மனு