தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 694 இடங்களுக்கு 7000 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சொற்பமான மாணவர்களே கலந்தாய்வுக்கு வந்துள்ளனர். அதனால், கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் உள்ள இருக்கைகள் அனைத்தும் காலியாக வெறிச்சோடியது.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், கட்டண விவரங்கள், பிற வசதிகள் உள்ளிட்டவை குறித்து கூறிவருகின்றனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் இன்று மிகக்குறைந்த மாணவர்களே சேர்ந்தால், நாளையும் கலந்தாய்வு நடத்துவதற்கு ஏழை மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 6 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கட்டணங்கள் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிரதிநிதிகள், மாணவர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தனியார் கல்லூரிகளில் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதை தவிர்த்துவருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கல்வி கட்டணம் வெறும் ரூ.13,300 என்பது குறிப்பிடத்தக்கது.