தமிழ்நாடு அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., ‘இந்த அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையான இதில் ஏதாவது நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இந்த அறிக்கையில் தென்படவில்லை.
தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனைகளை பற்றி நிதிநிலை அறிக்கை எதுவுமே பேசவில்லை. வேளாண் மண்டல அறிவிப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சந்தேகத்தை தீர்க்கவில்லை.
வழக்கமான வரவு-செலவு கணக்குகளின்றி வேறெந்த புதிய திட்டங்களும் இல்லை. நீண்டகால திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத அறிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு எவ்விதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் வகுக்கப்படவில்லை. உருப்படியான எந்த பணிகளும் மேற்கொள்ள வழிவகை செய்யவில்லை. இன்னும் பல கிராமப்புற மக்களுக்கு ஓய்வூதியம் சென்று சேராத நிலை, ஏழை எளிய மக்கள் வதைப்படுகிறார்கள். அதற்கும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் இல்லை.
உயர்க்கல்வி முன்னேற்றத்திற்கு அதன் கட்டமைப்பு வசதிக்கும் ஒன்றுமே செய்யாமல் அதையே பெருமை அடித்துக்கொண்டதாக இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. மசூதியை பாதுகாக்க இருந்த வக்பு வாரியத்தை கலைத்துவிட்டனர். சிறுபான்மை மக்களின் நலன் எனும் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த மக்களின் அச்சங்களைப் போக்கும் வண்ணம் பேசி இருக்க வேண்டாமா ? பேசவில்லை, இப்படி எதுவும் பேசாமல் சிறுபான்மை மக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார்கள் ?
காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து 5 வருடங்களாக இதையே சொல்கிறார்களே ஒழிய அதற்குரிய அறிவிப்பும் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை அலங்காரமாக ஜோடிக்கபட்ட அறிக்கையே. இதனால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்த நிதிநிலை அறிக்கையை ஏமாற்று அறிக்கையாகவே கருதுகிறது’ என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட்2020: கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!