சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின, அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி வாரியாகப் பிரித்து வழங்க வழக்கு
2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடாக, 84 இடங்கள்தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளைப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்குக் கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மண்டலம் வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியிருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடையில்லை
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று ஆஜராகி, 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ஜனவரி 27ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அப்போது விளக்கம் அளித்த நீதிபதிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்றார். தேர்தல் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:helicopter crash: குன்னூரில் ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி