நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் நேற்று (நவம்பர் 24) பிற்பகல் 3 மணிக்கு பிறகு அனைவரும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் இன்று (நவம்பர் 25) இரவு புயல் கரையை கடக்கும் என்பதாலும், காலை முதலே கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் 25ஆம் தேதி நள்ளிரவு அல்லது 26ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளையும் (நவம்பர் 26) பொதுவிடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் நாளை நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என ஏற்கனவே தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.