சென்னை: சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப்பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூடானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதை அடுத்து அவர்களை மீட்க கோரி சூடானில் சிக்கி உள்ள தமிழர்களின் குடும்பத்தோர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மத்திய அரசு ஆபரேசன் காவிரி(Operation Kaveri) என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள 360 இந்தியர்களை மீட்டு சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் தமிழர்களை கண்டறிந்து அவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. இந்த நிலையில் மீட்கப்பட்ட 9 தமிழர்களில் ஐந்து பேரை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர். அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மீதமுள்ள நான்கு தமிழர்கள் டெல்லியில் இருந்து நேரடியாக விமானம் மூலம் மதுரை சென்றடைந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த ராஜசேகர், தியா, சோபியா, சந்தோஷ் குமார், கிருத்திகா ஆகிய ஐந்து பேரையும் சென்னை விமானநிலையத்தில் வருவாய் அதிகாரி தலைமையில் வரவேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீட்கப்பட்ட நபர்கள் கூறுகையில், "கடந்த எட்டு ஆண்டுகளாக பார்த்த சூடானுக்கும் தற்போது போர் நடக்கும் சூடானுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் துப்பாக்கிசூடு, கலவரம் என அடிப்படையில் சூடானின் நிலையே மாறியிருக்கிறது. எங்கள் பொருளாதாரம் முற்றிலும் தடைபட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் நாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு கையில் ஒரே ஒரு பையுடன் தாயகம் திரும்பி இருக்கிறோம்.
போர் பதற்றம் முடிவுக்கு வந்தாலும் மீண்டும் சூடான் செல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அதேபோல அங்கிருந்து எங்களை மீட்டு வர உதவியாக இருந்த இந்திய தூதரகத்திற்கும், மத்திய அரசுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக தாயகம் திரும்ப உதவிய தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கண்ணீர் மல்க கூறினர்.
இதையும் படிங்க: "இந்தில பேசாதீங்க.. தமிழ்ல பேசுங்க.. ப்ளீஸ்!" - ஏ.ஆர்.ரஹ்மான் அன்புக் கட்டளை!