சென்னை: கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக கடந்த மாதம் 26ஆம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பெட்ரோல் குண்டுகளை வீசிய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த குற்றவாளி கருக்கா வினோத்தைக் கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
மேலும், கருக்கா வினோத்திடமிருந்து இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் கைப்பற்றினர். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும் நீண்ட நாட்களாகச் சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, கிண்டி போலீசார் ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் என் ஐ ஏ அதிகாரிகள் இந்த விசாரணையைத் துவங்க உள்ளனர். இது தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை அதிகாரிகளை நியமித்து உள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக டிஜிபிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் கடிதமும் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை கோப்புகளை ஒப்படைக்குமாறு குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆளுநர் மறுப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற முடியாமல் மறைந்தார் தியாகி என்.சங்கரய்யா!