இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday
1. இன்று காலையில் விடுதலையாகிறார் சசிகலா
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்த நிலையில் இன்று காலை அவர் விடுதலை செய்யப்படுகிறார்.
2. ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை இன்று காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்கிறார்.
3. ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று தைத் தேராட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்து அருள்பாலித்தார். திருவிழாவில் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் இன்று நடக்கிறது.
4. இந்திய இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வருகின்றனர்.
5. பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி
தலைநகரத்தில் நேற்று(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி, மத்திய டெல்லி பகுதிகளுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
6. பாஜகவில் இணையும் புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது மந்திரி பதவி, சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜ தலைவர் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று அமித் ஷா தலைமையில் பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.