சென்னை: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரை சேர்ந்தவர் முருகன், அமுதா தம்பதி. இவர்களுக்கு மேகலா(22) என்ற மகள் உள்ளார். மேகலா பிகாம் படித்த பட்டதாரி. இந்தநிலையில் மேகலா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சாலி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(27) உடன் நட்பாக பழகி வந்துள்ளார். காலப்போக்கில் நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வடபழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு யுவராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று மேகலாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவர் இடையே தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் அடித்ததாக கூறி மேகலா பழைய பெருங்களத்தூரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது மேகலா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறைக்குச் சென்ற மேகலா காலை வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற பெருங்களத்தூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான எட்டே மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை - 75 வயது தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு