சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த பல்லாவரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்துவருபவர் சந்திரகுமார்-சத்தியவாணி தம்பதி. இவர்களது மகள் தீபிகா (19) 12ஆம் வகுப்பு படித்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்தனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரசாந்த் பணிபுரிந்துவருகிறார்.
இச்சூழலில் மூன்று மாதங்களுக்கு முன்பு தீபிகா வீட்டை விட்டு வெளியேறி பிரசாந்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்திலும், மகளிர் காவல் நிலையத்திலும் தீபிகாவை காணவில்லை என்று பெற்றோர் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தீபிகா பிரசாந்துடன் இருந்தது தெரியவந்தது.
பின்னர் பிரசாந்தையும் தீபிகாவையும் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டதையடுத்து, இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால், காவல் துறையினர் எழுதி வாங்கிக்கொண்டு தீபிகாவை பிரசாந்தின் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது ஆடி மாதம் என்பதால் தீபிகா தனது தாயார் வீட்டுக்கு ஜூலை 20ஆம் தேதி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 31) மதியம் 3 மணியளவில் தனது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா இறந்து கிடந்தார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த காவல் துறையினர், தீபிகாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!