தமிழ்நாடு அரசியலில் எலியும் - பூனையுமாக இருக்கும் இரண்டு கட்சிகள் அதிமுக - திமுக. தமிழ்நாட்டை பொறுத்தவரை இவ்விரு கட்சிகளும்தான் கடந்த பல ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சியமைத்து வருகின்றன.
தேர்தல் தொடங்கி பல பிரச்னைகளில் இரு கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. என்ன விமர்சனங்கள் இருந்தாலும், அரசியலில் நாகரிகம் எல்லைக்குள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது.
தமிழ்நாடு அரசியலில் இரு பெரும் ஆளுமையான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா - மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரும், அரசியல் ரீதியாக இதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை.
இருப்பினும், 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் அப்போதைய இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிதி வழங்கினார். 2016ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதேபோல், கருணாநிதி அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் இருந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அதன் பிறகு, கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவருக்கு மெரினாவில் இடம் கேட்டு ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுவே பழனிசாமி - ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசிய இறுதியான நிகழ்வு.
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க அதிமுக அரசு மறுத்தாலும், கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த அதிமுகவின் மூத்த அமைச்சர் என்ற முறையில் ஜெயக்குமார் பங்கேற்றார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கு நாகரிக அரசியல் புதிது இல்லையென்றாலும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற சந்திப்புகளால் தமிழக அரசியல் களம் புதுவிதமாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கல்வி - வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர் - முக ஸ்டாலின்