கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்வதற்கு பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பகுதி பகுதியாக அறிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று நான்காவது நாளாக நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், செயற்கைக்கோள் ஏவுகணை ஏவுதல், தயாரிப்பில் தனியார் அமைப்பின் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்து ஒன்று. இந்திய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி உலகளவில் உயரவும், உலகளவில் நாம் போட்டியிடவும் முடியும். இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக அளவு வேளை வாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும். 2020ஆம் ஆண்டில் இது ஒரு முக்கியமான அறிவிப்பு” என தெரிவித்தார்.