கரோனா ஊரடங்கை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கரோனா தாக்கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் மதுரைக் கிளையில் உள்ள மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவும் மட்டும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர்களின் அறைகளை மூடுவதால் நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மார்ச் 8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் 2021: உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த கதை