சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல்செய்தது.
வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
மருத்துவக் காப்பீட்டுக்காக மாதம் ரூ.300 பிடித்தம்
இந்நிலையில் இன்று (செப்.3) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எரிசக்தித் துறை மீதான கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் , “மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி 2025 ஜூன் 30 வரை புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது நடைமுறையில் இருக்கும்.
இதற்காக அரசு ஊழியர்களிடம் மாதம் ரூ.300 பிடித்தம் செய்யப்படும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். புதிய முறையின் மூலம் 1,169 மருத்துவமனைகளில், 203 முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் பள்ளிக்குச் சீல் வைக்கப்படும்'