விழுப்புரம்: அண்ணா நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவருபவர் ராணி (57). இவரது மகள் புவனேஷ்வரி (26) அதே பகுதியில் ஃபேன்சி கடையில் வேலை செய்துவருகிறார்.
புவனேஸ்வரி கடந்த 7ஆம் தேதி, வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு அண்ணாநகர் வழியாக நடந்துசென்றார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் புவனேஸ்வரி கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றார்.
பின்னர் புவனேஷ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அண்ணா நகர் தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியிலிருந்த 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர்.
இதில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்த வந்த நபர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த யோகேஷ் ( 29) என்பவரைக் காவலர்கள் கைதுசெய்தனர்.
விசாரணையில் பகுதி நேரமாக அலுவலகங்களில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே இரவு உணவு டெலிவரி வேலை செய்துவந்ததும், மனைவிக்குத் தாலி பிரித்துக் கோக்கும் நிகழ்வுக்குப் பணம் இல்லாததால், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து ஆறு பவுன் தங்க நகை திருட்டு