சென்னை: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், சமூகவியல் துறையின் ஐம்பதாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் பொன்முடி, "ஒரு காலத்தில் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்காத நிலை இருந்தது.
ஆனால் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் காரணமாக கல்வித்துறையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இன்று அதிக அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் இயங்குகின்றன.
பெண்களின் வளர்ச்சிக்கு திமுக காரணம்
பெண்களுக்கு அனைத்து வகையிலும் வளர்ச்சி ஏற்படுவதற்கு காரணமாக திராவிட இயக்கம் இருந்தது. கல்வி என்பது வேலை வாய்ப்புக்கானது என்று மட்டுமில்லாமல், ஒவ்வொருவருடைய சுயசிந்தனையை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும்.
மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டங்கள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்லூரிகளை எப்போது திறப்பீர்கள் என மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டுவருகின்றனர். நாங்களும் எப்போது திறக்கலாம் என உங்களிடம் கேட்கிறோம்.
ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்த வேண்டும்
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இணையதளம் மூலம் தொடர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது. சமூகவியல் துறை உள்பட அனைத்து துறைகளிலும் சிந்தனையை தூண்டும் வகையில் ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் - எ.வ. வேலு