சென்னை: மிகப்பெரிய கடற்கரைகளுள் ஒன்றான மெரினா சென்னையின் முக்கியச் சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்துவருகிறது. சமீப காலமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கச் சென்று அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை ஏற்று மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவு அமைக்கும்பொருட்டு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி மண்டல இணை இயக்குநர் சரண்யா, கடலோர காவல்படை துணைத் தலைவர் மகாபத்ரா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலராக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் காவல் துறை கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மெரினா கடற்கரையில் செயல்பட்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரை ஒருங்கிணைத்து, கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவில் 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் விரைவாகப் பணியமர்த்த டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கினார்.
அதேபோல கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு அண்ணா நினைவிடம், காந்தி சிலை, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பயிற்சிபெற்ற உயிர்காப்புப் படையினரை நிறுத்தவும், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகளை வழங்கி கண்காணிக்க 5 காவல் கண்காணிப்பு கோபுரங்களை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக எச்சரிக்கைப் பலகைகள், கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவவும், அவசர உயிர்காக்கும் சேவைக்கென இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், கடலோர காவல்படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இணைந்து இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தி உயிரிழப்பில்லாத பாதுகாப்பான மெரினா கடற்கரையை உருவாக்க இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காவல் துறை, ஆயுதப்படையைச் சேர்ந்த 50 காவலர்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர்களையும் இந்த மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவில் கூடுதலாக பணியமர்த்தவுள்ளனர். உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம்.
மேலும் அவ்வாறு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் கட்டுப்பாட்டறை தொலைபேசி எண் 044-28447752-க்கு தொடர்புகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் எனவும் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிலை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனனாக உள்ள சிங்கை வாழ் தமிழன் விஜய் குமார்!