சென்னை அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும்.
சென்னை மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க இந்தத் திட்டம் பெரிதும் உதவும். இதேபோல் மாநிலத்தில் எந்தெந்த பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தினால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் இரண்டு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும். குறிப்பாக சென்னையில் என்றைக்கும் தண்ணீர் பிரச்னை ஏற்படாதவாறு எங்கள் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் இனி புதிய தொழிற்சாலைகளோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி ஏற்படுத்தினால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.