தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி பரிசுத் தொகுப்பானது மஞ்சள் பையுடன் கூடிய பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு ஒன்று ஆகியவற்றுடன் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 3ஆம் தேதிமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டிலிருந்து பை கொண்டுவந்து பொங்கல் சிறப்புத் தொகுப்பைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பைகள் இன்றி பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
பைகளின்றி தொகுப்பு வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும். புதிய நெறிமுறைகளைப் பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க பொது விநியோகத் திட்ட அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் விழாவில் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம்!