சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "விளைவிக்கும் பொருள் மசோதா, அத்தியாவசிய பொருள் மசோதா, ஒப்பந்த சாகுபடி மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய மசோதா தான், அதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத மசோதாவிற்கு தான் ஆதரிப்பார். மாநிலங்களவையில் பாலகிருஷ்ணன் விளக்கம் மட்டுமே கேட்டதால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அனைத்து சலுகைகளும் விவசாயிகளுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கான நிதியை முறையாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
தேர்தல் வருவதால் மட்டுமே இதை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். கரோனா காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நாள் கூட வீட்டில் தூங்காமல் உயிரை துச்சமென மதித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரை போல் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இருக்க முடியாது" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய வேளாண்மைத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, "1991ஆம் ஆண்டு சட்டப்படி மார்கெட்டிற்கு வெளியில் கூட விவசாயிகள் விற்பனை செய்து கொண்டிருகிறார்கள். அதே போன்று உழவர் சந்தை திட்டமும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரக்கூடிய இந்த சட்டம் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
மத்திய அரசு திட்டத்தின்படி, விவசாயிகள் விருப்பப்பட்டால் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், கட்டாயம் இல்லை. விவசாயிகளுக்கான ஆதார விலை மற்றும் பதுக்கல் முறை மீதான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்தார்.