மக்கள் பாதை இயக்கம் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக விருகம்பாக்கத்தில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
இன்று (செப்.19) உண்ணாநிலையில் ஈடுபட்டுவருபவர்களை நேரில் சந்தித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உயிர்களைத் தொடர்ந்து பலி கொடுத்துவரும் நீட்டை எதிர்த்து ஆறு நபர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதுவரை அரசு சார்பாக எந்தவித பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. திமுக சார்பில் தொடர்ந்து நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்திவருகிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததுபோல் திமுக ஆட்சியில் நிச்சயம் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு வாங்கித் தந்த அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்ததை தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியால் செய்ய முடியவில்லை.
கரோனாவைவிட கொடூரமான ஆட்சி இது. ஆளுமைத்திறன் இல்லை. அதுவே அனைத்திற்கும் காரணம். தமிழ்நாட்டில் நடப்பது இம்போட்டன்ட் (impotent) ஆட்சி என்று ஒருவர் கூறியது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக, அமமுகவினர்!