பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுதான், நீட். இத்தேர்வில் 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், இந்த ஆண்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை.
2018ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 825 பேர், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 9,184 பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 1,391 மாணவர்கள் தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களைப் பெற்றனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 1,157 பேர், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்14,929 பேர் பங்கேற்றதில், 2,583 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலிருந்து 2 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்பதாக, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நீட் தேர்வு எழுதக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவது தெரியவந்துள்ளது.
அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த அரசு மற்றும் அரசு உதவி பெற்ற பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்குள்ளாகவே இருக்கிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வந்ததால், தேர்வு எழுதக்கூடிய 2 ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க: நீட் அல்லாத கல்லூரி படிப்புகளுக்கு 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!