சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால் 2021-22ஆம் கல்வியாண்டில் திமுக ஆட்சிக்கு வந்த உடன், மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு அரசுப் பள்ளிகளில் படித்து, கடந்த ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் குறைந்தளவே தகுதிபெற்றனர்.
இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் நீட் தேர்வினை எழுதுவதற்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மீண்டும் நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விரும்பம் உள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
முதல்கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
11ஆம் வகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டுமே நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை விதிமுறையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை செயலிழக்க செய்த நபர் கைது