நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 15-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் முக்கியத் தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு, இந்தி தெரியாது ஆனால் பிகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவத் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவன் தனுஷ் மீது சந்தேகம் இருப்பதாககக் கல்லூரி நிர்வாகம் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் பூக்கடை தனிப்படை காவல் துறையினர் ஓசூர் சென்றனர். ஆனால் மாணவனும், அவரது தந்தையும் கடந்த சில நாள்களாகவே தலைமறைவாகி இருந்ததைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், நீட் ஆள்மாறாட்டம் குறித்த வழக்குகளை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவரும் நிலையில், தலைமறைவான மாணவனுக்கும் நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிபிசிஐடி காவல் துறையினருக்குத் தலைமறைவான மாணவனின் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பூக்கடை காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து புதிய வழக்கு ஒன்றை சிபிசிஐடி காவல் துறையினர் பதிவுசெய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்துவந்த சென்னை மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ், அவரது தந்தையைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
2018ஆம் ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று தற்போது தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாமாண்டு படித்துவரும், இரண்டாயிரத்து 500 மாணவர்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் யார் யாரென சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் பார்க்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை