சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில், இதன் முடிவுகளை தேசியத் தேர்வு முகமை கடந்த ஜூன் 13அன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தனர்.
இந்நிலையில் ஸ்ரீ சைதன்யா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த போரா வருண் சக்கரவர்த்தி 720 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தையும், எஸ். வருண் 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். அதேபோல் ரோஷன் ஆண்டோ 705 மதிப்பெண்கள், கவியரசு 705 மதிப்பெண்கள், சௌமியா வேலகா 700 மதிப்பெண்கள், சத்தியசுத்தி 700 மதிப்பெண்கள், ஆனந்தி மெய்யப்பன் 697 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மேலும் 2023 நீட் தேர்வில் தனியார் பள்ளியில் படித்து சாதனைப் படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தினர். இதில் சைதன்யா தனியார் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாணவி ஆனந்தி, “நீட் தேர்வினைப் பொறுத்தவரை அதிகம் படிக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த விதம் நன்றாகப்புரிந்து கொண்டு படித்ததால் நீட் தேர்வில் தற்போது நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு பயிற்சி எடுத்தால் நீட் தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும். நல்ல மதிப்பெண்ணும் எடுக்க முடியும்'' என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இதுகுறித்து 715 மதிப்பெண்கள் எடுத்த எஸ். வருண் என்ற மாணவன், ''நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. எங்களது பள்ளியில் எடுத்த பயிற்சி மிகவும் உதவியாக எனக்கு இருந்தது.
தேர்வுக்கு முன்பு மிகவும் பயமாக இருந்தது. நம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொண்டு தேர்வை எழுதினேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் தோல்வியடைந்தால் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. அடுத்த தேர்வில் முயற்சி செய்து வெற்றி பெற முடியும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: NEET: தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர் பிரபஞ்சன் கூறும் ஆலோசனை