இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நன்கு படித்து எதிர்காலத்தில் சமுதாயத்தின் அனைத்து மரியாதைகளுடன் வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு இளைஞரை, ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கன் பலி கொண்டிருக்கிறான்.
சென்னையில் தற்கொலை செய்து கொண்ட 20 வயது மாணவன் ஆன்லைன் சூதாட்டத்திற்கான முதல் உயிரிழப்பு என்று கூற முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி குறித்து இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப் படுகின்றன. ஆன்லைன் ரம்மி ஆடினால், முதலீடு செய்யும் பணத்தை விட ஒன்பதப மடங்கு வரையிலான பணத்தை மூன்று நிமிடங்களில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டப்படுகிறது.
அவற்றால் கவரப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதன்பின் வாழ்க்கையில் மீள்வதே இல்லை. பலர் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர். சிலர் உயிரையே இழந்து விடுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டங்களின் தீமைகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.
அது சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மிகச்சரியான தீர்ப்பு. தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில், அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதமோ, அலட்சியமோ காட்டக்கூடாது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், அதை செயல்படுத்துவதற்காக புதிய சட்டம் இயற்றுவது குறித்தும் மத்திய அரசு ஆராய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.