கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மே24ஆம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 எம்.பி, 22 எம்எல்ஏக்கள் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குவதன் மூலம் 500 செறிவூட்டிகள் கிடைத்திடும் என உறுதியளித்தனர்
அதனடிப்படையில், முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுபினருமான மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
இதே போல, பல இடங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலா 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், " சென்னை மாநகராட்சி சார்பில் 2,705 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களின் மூலமாக 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளன. மாநகராட்சியிடம் இதுவரை பெறப்பட்ட 3080 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கும், கரோனா சிகிச்சை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.