சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. கே. விஸ்வநாதன் முழு ஊரடங்கையொட்டி K-10 கோயம்பேடு காவல் நிலையம் அருகில் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், " முழு ஊரடங்கில் இன்று(ஜூன் 21) மட்டுமே 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாள்களில் 10 ஆயிரத்து 665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஊரடங்கு வீதியை மீறிய 10 ஆயிரத்து 604 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத குற்றத்திற்காகவும் மொத்தம் 3 ஆயிரத்து 517 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளியே சென்றவர்களின் கணக்கு விவரம் எவ்வளவு என்பது தெரியவில்லை. பலர் அனுமதி பெறாமல் சென்றுள்ளனர். அவர்களின் விவரத்தை சேகரித்து வருகிறோம். மேலும் நாளை சில தளர்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.