சித்த வைத்தியத்தின் தந்தை என போற்றப்படும் சித்தர் அகத்தியரின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. சித்தா தினம் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான 2021 ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தாம்பரம் சானடோரியத்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் 25 நாட்களுக்கு முன் தொடங்கியது, இதன்படி பொதுமக்கள் சித்த மருத்துவம் சார்ந்து அவர்களின் உடல் நலனை பாதுகாப்பதற்கான சொற்பொழிவுகள், விரிவான விளக்கங்களுடன் கூடிய தினம் ஒரு மூலிகை கண்காட்சி உள்பட பல நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டுதலைப் பின்பற்றி இணையதளம் வாயிலாக நடந்துவருகின்றன.
நிகழ்ச்சியின் இறுதி நாளான வரும் ஜனவரி இரண்டாம் தேதி தேசிய சித்த மருத்துவ தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறுமென தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் மீனா குமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட் நாயக் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள் இணையதளம் வாயிலாக கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்!