சென்னை: பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞரும், சமூக நீதி பேரவை தலைவருமான கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டது.
கடந்த பல மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.
அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்து, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும், கால அவகாசம் வழங்காமல், உடனடியாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். 24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால், பத்து மாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமனம் செய்ய முடியவில்லை? என கேள்வி எழுப்பினார்.
அப்போது மத்திய அரசு சார்பில், நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் நடைமுறைகள் முடிக்கப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் தேர்வில் மின்னல் வேகம் ஏன்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!