இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன் பின்னர், உள்துறை அமைச்சகத்திற்கு துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக கடிதம் எழுதினேன். அதில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என பதில் வந்தது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இன்று, ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
எனவே, துணைநிலை ஆளுநர் தன்னுடைய செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்கி உள்ளார். மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பு மூலம் புதுச்சேரி மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும். மாநில வளர்ச்சிக்காக செயல்பட முடியும் என்றார்.
மேலும், சிதம்பரம் தொகுதியில் யார் வன்முறையை துண்டுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். முத்தரசனும், எஸ்ரா. சற்குணமும் வன்முறையை தூண்டுபவர்கள் அல்ல எனத் தெரிவித்தார்.