சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாகவும், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி இன்று (மார்ச்.17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் +2 தேர்வுகளுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில், 46 ஆயிரம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாத அளவிற்கு கல்வி தரம் குறைந்துள்ளதா? இந்த மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், 46 ஆயிரம் மாணவர்களும் இடை நின்றவர்கள் என்றும், அதாவது 11ஆம் வகுப்பிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. படிக்காத மாணவர்களை படிப்பதாக கணக்கு காண்பிக்கும் மர்மம் என்ன?
இது உண்மையென்றால், கடந்த இரு வருடங்களாக அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர் என்று திமுக அரசு அறிக்கை விட்டு கொண்டிருந்தது உண்மைக்கு புறம்பானது என்பது புலனாகிறது. அப்படியென்றால், தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரப்படுத்தி கொண்டது ஏன்? என்பதை தமிழ்நாடு கல்வித்துறை விளக்க வேண்டும்.
மேலும், அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும் சுமார் 70,000 ரூபாய் மதிப்பில் இலவச சீருடை, மடிக்கணினி, சைக்கிள், பாடப் புத்தகங்கள், கட்டண சலுகை மற்றும் இதர சலுகைகளை தமிழ்நாடு அரசு செலவிடுகிறது. இந்நிலையில், இடைநிற்றலால் தேர்வுக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட்டனவா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாத மாணவர்கள் இருப்பதாக கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தால் பெரும் ஊழல் இந்த விவகாரத்தில் நடந்திருப்பதாக உறுதியாக சொல்ல முடியும்.
அதாவது, 46000 X 70000 ரூபாய். அதாவது, +1 வகுப்பிற்கு ரூபாய் 322 கோடியும், +2 வகுப்பிற்கு 322 கோடியும் ஆக மொத்தம் ஒவ்வொரு வருடமும் 644 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா? இல்லாத மாணவர்கள் இருப்பதாக காண்பிக்கப்பட்டு முறைகேடு நடக்கிறது என்பதை மறுக்க முடியுமா? ஒரு வேளை, இந்த இலவசங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால், 46,000 மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்ந்திருப்பார்கள் என்பதும் உறுதி.
மாணவர்கள் படிப்பை தொடராமல் இருந்திருந்தாலும், தொடர்ந்திருந்து தேர்வு எழுத வராது இருந்திருந்தாலும், அதற்கு கல்வித்துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் தான் பொறுப்பு. இந்த விவகாரத்தில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அதற்கும் திராவிட முன்னேற்ற கழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
ஆகையால் நடந்த குற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து பொறுப்பேற்பதோடு, கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: "விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு" - ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்!