சென்னை: கடந்த 2017-ல் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டு பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழும், அவதூறு சட்டப் பிரிவின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழிசை பற்றி விமர்சனம்
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும், வேண்டுமென்றே இந்த பிரிவை சேர்த்துள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தரப்பில் வாதிடப்பட்டது.
நாஞ்சில் சம்பத் மீது வழக்கு
தமிழிசையை மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நாஞ்சில் சம்பத், கொச்சையாக விமர்சனம் செய்துள்ளதாக புகார்தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் காவல் துறையினர் விசாரிக்கலாம் என்றும், மற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் புகார்தாரர் பல்லாவரம் காவல் துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 6 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டி அசத்திய எம்எல்ஏ நிவேதா முருகன்