மாணவர்களிடையே அதிகரிக்கும் சாதிய மோதல்கள்.. தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை! - Tamil Nadu Department of School Education
தமிழ்நாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகளில் நடக்கும் சாதிய மோதல்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆக.31 முதல் செப்.2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Published : Aug 30, 2023, 9:57 PM IST
சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில், 'பள்ளிகளில் நடைபெறும் சாதிய மோதல்களை தடுப்பது' குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடனான மாதந்திர ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமாெழி மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் சாதிய மோதல்கள் தடுப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு மாணவரையும், அவரது தங்கையையும் அதே பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் வீடு புகுந்து கத்தியால் வெட்டிய சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கடந்த காலங்களிலும் இந்த மாவட்டத்தில் பள்ளிகளில் சாதிய மோதல்கள் நடந்திருக்கின்றன.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாணவர்களிடம் சாதிய மோதல்கள் நடைபெற்றது. இதனால், பள்ளியில் மாணவர்களின் சான்றிதழை பெற்றோர்கள் கேட்கும் நிலையும் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆசிரியர்களுக்கு தர வேண்டிய தொகையை சரியாக தராததால் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வழக்குகளின் நிலையையும் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி தகவல் மேலாண்மை முறைமைக்கு தேவையான தகவல்களை பதிவு செய்வது, மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்வது, தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தின் செயல்பாடுகள், மாதிரிப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி மீது சக மாணவர் ஒருவர் அரிவாளல் பயங்கரமாக தாக்கிய சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவ மாணவர்களிடையே சாதிய கண்ணோட்டமும், அதன் விளைவாக சாதிய பாகுபாடும் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் மாநிலமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் சாதி, மத ரீதியான மோதல்களை தடுக்கவும், இனப்பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவிற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இக்குழு இதுகுறித்த தனது விசாரணையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.