சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மருத்துவர்களுடன் அமர்ந்து போராட்டத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நியாயமான நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கொடுத்த கால அவகாசத்திற்கு பின்னர்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்களை மக்களுக்கு எதிரானவர்கள் போல் அரசு காட்டுகிறது. அவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசி முதலமைச்சர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மருத்துவர்களைப் பணிநீக்கம், பணியிட மாற்றம் என அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது அழகல்ல, அதிகாரம் நிரந்தரமானதும் அல்ல. அரசு மிரட்டல் விடுப்பதால் போராட்டம் மேலும் வலுப்பெறும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.