சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.
இதற்கிடையே, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 9ஆம் தேதி இதற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அரசாணையில், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டப்படுகிறது. பெயர் மாற்றத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது” என தெரிவித்தது
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டில், ”எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.