ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களாக சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் ஆறு மாத காலம் பரோல் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்குமுன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து ஒருமாத காலம் மட்டுமே பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், உறவினர் வீட்டில் தங்கவுள்ள நளினிக்கு பரோல் காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நளினி தரப்பு வழக்கறிஞர் தமிழ்நாடு அரசிடம் பரோல் காலத்தை நீட்டிக்க கோரிக்கை வைக்க உள்ளதாக கூறிவந்த சூழலில், சிறைத்துறையினரின் ஆய்வுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று அவர் பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.