நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் உரிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் இன்று சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடிகர்கள் கார்த்தி, நாசர், மனோபாலா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டது. பல தடைகளைத் தாண்டி நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது எங்கள் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எங்களை பொறுத்தவரை இந்த நடவடிக்கைகள் என்பது ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்வோம்.
இருப்பினும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம். தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் நாளை வரவுள்ளது. நாங்கள் புதிய ரிட் பெட்டிசனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம். அலுவலகத்தில் சிறப்பு அலுவலர் கேட்கும் ஆவணங்களை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நான்கு பேர் சேர்ந்து 3,222 பேர் உள்ள ஒரு அமைப்பை செயல்படவிடாமல் தடுத்துள்ளனர்.
புகார்தாரர்களாக எம்.ஆர்.ஆர். சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. சங்கத்திலிருந்து ரூபாய் 4 ஆயிரத்திற்கும் அதிகமான தொகை பென்சனாக வழங்குகிறோம்.
இத்தொகை வழங்க வேண்டும் என்று சங்கத்தின் பதிவு ஆவணத்தில் இல்லாமல் இருந்தாலும் அறக்கட்டளை சார்பாக நாங்கள் கொடுத்து வருகிறோம். இவ்வாறு செயல்படும் எங்கள் மீது குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கிறது. இருப்பினும் எங்கள் தரப்பில் நியாயம் உள்ளது என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்போம். சங்கத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் செயல்பட்ட அலுவலர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்போம்” என்றனர்.
இதையும் படிங்க: கமலுக்கு 65 அமிதாப்பிற்கு 50! - அப்பா ’பிக் பி’யை வாழ்த்திய அபிஷேக்!