மயிலாப்பூர் கேசவப் பெருமாள் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம், மீனாட்சி தம்பதியர் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்தனர். அந்தக்கடையில், மீனாட்சியின் சகோதரி மைதிலியும், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். நாளடைவில் மைதிலிக்கும், பாலமுருகனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை அறிந்த தர்மலிங்கம், பாலமுருகனை அடித்ததோடு, மைதிலியையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தர்மலிங்கம், மீனாட்சி இருவரும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த மரணத்தில் சந்தேகமடைந்த தர்மலிங்கத்தின் சகோதாரர் குமார், மீனாட்சியின் மற்றொரு சகோதரி லதா ஆகியோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து, ஓராண்டிற்குப் பின்னர் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், பாலமுருகன் மைதிலி உறவு தர்மலிங்கம், மீனாட்சி ஆகியோருக்கு தெரியவந்ததாலும், சொத்துக்காகவும் பாலமுருகனுடன் இணைந்து மைதிலி அவர்களை கொலை செய்ததை கண்டுபிடித்தனர். மேலும், மருத்துவமனையில் சுய நினைவற்று இருந்த தர்மலிங்கத்திடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக விசாரணையில் மைதிலி தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் தர்மலிங்கத்தின் சகோதரர் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், தர்மலிங்கம், மீனாட்சி மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக, தர்மலிங்கம் மீனாட்சி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்த, மீனாட்சியின் மற்றொரு சகோதரி லதாவுக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தர்மலிங்கம் வங்கிக்கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாய், லதாவின் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டதை சிபிசிஐடி காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரித்ததில், கொலைக்கு லதாவும் உடந்தையாக இருந்தது அம்பலமானது.
குழந்தை இல்லாமல் இருந்த தர்மலிங்கம், மீனாட்சி தம்பதியரை சொத்துக்காக மீனாட்சியின் சகோதரிகள் லதா, மைதிலி உள்ளிட்டோர் இணைந்து கொலை செய்துள்ளது, இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை மடக்கிப் பிடித்த காவல்துறை