இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதியது, தேச துரோக குற்றமா?
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்துகளை கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலக வாயிலாக பதில் அனுப்புவது கடமையாகும். ஆனால் இன்று பிரச்னை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமருக்கு பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் நாட்டில் நடைபெற்று வரும் விரும்பத்தகாத படுகொலைகள், தாக்குதல்கள், இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கூட்டுக் கும்பல் தாக்குதல்கள் குறித்து கடிதம் எழுதினர்.
கடிதத்திற்கான ஆதாரமாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது: கடந்த 2016ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 840 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மிகக் குறைவே. 2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி 1, வரை மதரீதியாக 254 வெறுப்பு கொலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 579 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கண்ட ஆதாரத்தை சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“குற்றங்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், குற்றம் புரிந்தோர் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். இனி இத்தகைய சம்பவங்களை நடைபெறாமல் இருக்க அரசு உத்திரவாதம் அளிக்கின்றது” என்ற பதில் பிரதமரிடமிருந்து வருவதற்கு மாறாக, கடிதம் எழுதியது குற்றம், அவர்கள் அனைவரும் தேசதுரோகிகள் என்று முத்திரை குத்தி வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேச துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது என்பது எந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாகத் தெரியவில்லை.
“இம் என்றால் சிறைவாசம்
ஏன் என்றால் வனவாசம்”
என்று, ஜார் மன்னன் ஆட்சி குறித்து பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகின்றது.
நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.