சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ரவுடிக்கு மாமூல் கொடுக்காத முன்விரோதத்தில் மே 21ஆம் தேதி இரவு, இவரை கோயம்பேடு பகுதியில் வைத்து ரவுடி கும்பல் மூன்று பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் ஒருவரை மட்டும் பிடித்து, கோயம்பேடு காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ரவுடி தக்காளி பிரபாகரன் என்பது தெரிந்தது. தற்போது அவரிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இரண்டு கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க கோயம்பேடு காவல் துறையினர் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்து ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினர்.
அப்போது விருகம்பாக்கம் காவல் துறையினர் விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்புப் பகுதிகளில் ரோந்துப் பணியில் இருந்தபோது திடீரென அங்கிருந்த மைதானத்திலிருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் ஓடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த விருகம்பாக்கம் காவலர்கள் நாம் தேடிய கும்பல் தான் இது என துரத்திய போது, ஒருவர் மட்டுமே கத்தியுடன் பிடிபட்டார்.
அதன்பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வடபழனியைச் சேர்ந்த கொள்ளையன் ரமேஷ் என்பவரைக் கொலை செய்து விட்டு அவர்கள் தப்பியது தெரிய வந்தது. உடனே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரது பெயர் விஜய் என்றும்; அவர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதேபோல் இறந்துபோன ரமேஷ் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் விசாரணையில் ரமேஷின் நண்பர் அஜித் மற்றும் சிலர் கடந்த மாதம் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி அஜித் உயிரிழந்துள்ளார். அஜித்தின் மரணத்துக்கு ரமேஷ் தான் காரணம் என அஜித்தின் அண்ணன் நினைத்து ரமேஷூடன் தகராறில் ஈடுபட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகில் உள்ள மைதானத்தில் ரமேஷ் மே 21ஆம் தேதி சிலருடன் மது அருந்தியுள்ளார். போதையிலிருந்த ரமேஷை ஆறு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போதுதான், காவல் துறையின் கண்களில் சிக்கியுள்ளனர்.
இந்தக் கொலை குறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரமேஷின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: முதியவரை கத்தியால் குத்திய இளைஞர்: காவல் நிலையத்தில் சரண்!