கலைஞரின் மனசாட்சி என திமுகவினரால் இன்றளவும் நினைவுகூரப்பட்டு வாஞ்சையாக அழைக்கப்படுபவர் முரசொலி மாறன்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான முரசொலி மாறன், 1934ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் தியாகராஜ சுந்தரம் என இவருக்குப் பெயரிட்டனர்.
கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறன், சிறுவயது முதலே கருணாநிதியின் புத்தக அலமாரியிலிருந்து பல புத்தகங்களையும் எடுத்து படித்து கருணாநிதியுடன் உரையாடி விவாதித்து வளர்ந்துள்ளார்.
முரசொலி மாறன் பெயர் காரணம்
பின்னர், கருணாநிதி ’முரசொலி’ பத்திரிகை நடத்தி வந்தபோது அதில் மேலாளராகவும், எழுத்தாளராகவும் மாறன் என்ற புனை பெயருடன் இயங்கி பின்னாட்களில் முரசொலி மாறனாக அறியப்பட்டார்.
அரசியல் குறித்த புத்தகங்களில் பெரும் ஆர்வம் உடையவரான முரசொலி மாறன் ’மாநில சுயாட்சி’ எனும் நூல் உள்பட, அரசியல், இலக்கியம் குறித்த நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளார். மேலும், தமிழ் திரையுலகில் வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராகவும் விளங்கினார்.
தோஹா மாநாடு
![முன்னாள் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12796007_p-2.jpg)
வி.பி,சிங், வாஜ்பாய் காலகட்டங்களில் ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றிய முரசொலி மாறன், 2001ஆம் ஆண்டு கத்தார் தலைநகர், தோஹாவில் ஆற்றிய உரைக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார்.
முன்னாள் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான அவர், தோஹா மாநாட்டில் நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தில் வளரும் நாடுகளுக்கு பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி, அங்கிருந்த வளரும் நாடுகளின் ஆதரவையும் பெற்று வல்லாதிக்க அமெரிக்க அரசையும் திகைக்க வைத்தார்.
கண்ணின் கருவிழி, கலைஞரின் மனசாட்சி
![கருணாநிதியுடன் முரசொலி மாறன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12796007_291_12796007_1629183649107.png)
தனது கண்ணின் கருவிழி என முரசொலி மாறனைக் குறிப்பிட்ட கருணாநிதி இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையைக் கேட்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்தார்.
![வாஜ்பாயுடன் முரசொலி மாறன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12796007_p-3.jpg)
2003ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் உயிரிழந்த நிலையில், மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்துபோனார் கருணாநிதி. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முதல் அனைவரும் முரசொலி மாறனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இன்று முரசொலி மாறனின் 88ஆவது பிறந்த தினம் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால கொண்டாடப்படுகிறது. முன்னதாக அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: 'கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றுக'