சென்னை: இது தொடர்பாக ‘ரயில் விபத்தால் நாடே அதிர்ந்தபோது குளு குளு வாசத்தில் அரசியல் நடத்திய ஆளுநர்’ என்ற தலைப்பில் முரசொலி பத்திரிகை ஒரு செய்திக் கட்டுரையை இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் பல்வேறு விதங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, ‘ஆளுநருக்குத்தான் வேலை இல்லை என்றால், தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணைவேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு ‘மேய்ற மாட்டை நக்கிடும் மாடு' வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்னும் பழமொழிக்கு ஏற்ப தமிழ்நாட்டு அரசின் செலவில், மனிதர் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சுக்ரயோகம் என்பார்களே, அது போன்ற யோகக்காரர்கள்தான் இந்தியாவின் ஆளுநர்கள். இதற்கு நமது தமிழ்நாட்டு ஆளுநர் ரவியையே எடுத்துக் கொள்ளுங்களேன். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து, அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து, தான் ஒரு 'Half boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தம் இல்லாத தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி, தனது முதிர்ச்சி அற்ற அறிவை வெளிப்படுத்தி உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பல நேரங்களில், தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் 'ஆப்பசைத்த குரங்காய்' அகப்பட்டுக் கொள்கிறார்.
'விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது' என பழமொழி கூறுவார்களே, அது போன்று வேண்டாத விவகாரங்களில் தலையிட்டு 'சனியனை' விலை கொடுத்து வாங்குவதில் ஆளுநர் ரவிக்கு பல நேரங்களில் ஒரு அற்ப சந்தோசம். சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு, பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆனாலும், அவர் பாடம் பெறுவதில்லை.
மீண்டும், மீண்டும் வாலை நுழைத்து ஆழம் பார்க்கிறார். அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இது தமிழ்நாடு, அதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். எனவே இங்கு இவரது பருப்புகள் வேகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றதை விமர்சித்திருந்தார்.
இதற்கு, நேற்று (ஜூன் 6) நகர்ப்புற நல வாழ்வு மையங்களின் தொடக்க நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைநிமிர்ந்து இருக்கக் கூடிய நமது மாநிலத்தின் வளர்ச்சி, நமது மாநிலத்திலேயே உயர் பதவி வகிக்கக் கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை.
அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாததால், தினந்தோறும் ஏதாவது ஒரு விமர்சன செய்தியை வெளிப்படுத்தி மக்களை குழப்பக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார்” என ஆளுநரை மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார். இது மட்டுமல்லாது, ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையிலான கருத்து மோதல்கள் சமீப காலங்களாக அதிகரித்த வண்ணம் இருப்பது பொதுமக்களுக்கு நல்லதல்ல என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சி மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவருக்கு புரியவில்லை - ஆளுநரை சாடிய முதலமைச்சர்