சென்னை: கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, தமிழ்நாடு அரசு பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை தெளிவுபடுத்தக் கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாலையின் அமைப்பை பொறுத்தவரை தாழ்தள பேருந்துகளை இயக்கினால் சேதம் அதிகமாகும் என்றும், அப்படிப்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதால், பொருட் செலவும் அதிகமாகும் என்பதால் உயர் நீதிமன்ற உத்தரவை தெளிவுபடுத்த வேண்டுமென மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தாங்களும் உத்தரவு பிறப்பித்ததால், தெளிவு தேவைபட்டால் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாட வேண்டுமென தெரிவித்ததை ஏற்ற மாநகர போக்குவரத்து கழகம், தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இதையும் படிங்க:ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து கன்னியாகுமரியில் ஆலோசனை