சென்னை: மும்பையில் பிரபல போதை கடத்தல் மன்னனாக வலம் வந்தவர், லலித் பாட்டில். கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புடைய 20 கிலோ போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக லலித் பாட்டில் மற்றும் அவரது கூட்டாளிகள், மும்பை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மும்பை சிறையில் லலித் அடைக்கப்பட்டார். மேலும் சிறையில் இருந்த லலித் பாட்டில், செல்போன் வைத்துக் கொண்டு தொடர்ந்து போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை இயக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி லலித் பாட்டிலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக சிறையில் இருந்து புனேவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது லலித் பாட்டில் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார். தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மும்பை போலீசார் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லலித் பாட்டிலை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலைமறைவாக இருந்த லலித் சென்னையில் பதுங்கி இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தகவல் அறிந்து சென்னை விரைந்த மும்பை தனிப்ப்டை போலீசார், லலித் பாட்டிலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். மேலும், லலித் பாட்டிலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லலித் பாட்டிலிடம் மும்பை போலீசார் நடத்திய விசாரனையில், 130 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் என்கிற போதைப்பொருளை பயோடெக் கம்பெனியில் வைத்து தயாரித்து வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவ வீரர் கொலை விவகாரம்; திருமணத்தை மீறிய உறவால் வந்த வினை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!