சென்னை: சென்னை மாநகராட்சி, நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகன நிறுத்த நடைமுறைகளை மேலும் மேம்படுத்திடும் வகையில் வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுமத்தால் வாகன நிறுத்த நடைமுறைகளை மேலும் மேம்படுத்திடும் வகையில் திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்துமிடத்தின் தற்போதைய நிலை, சவால்கள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகள் மற்றும் ஆய்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
மாநகராட்சி சார்பில் இது குறித்து இந்த கூட்டத்தில், “தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் வாகன நிறுத்த மேலாண்மை இதற்கான அனுமதி பெற்ற உரிமதாரரால் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் 12 ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்பட்டாலும், அனுமதி பெற்ற உரிமதாரரால் 5ஆயிரம் கார்கள் நிறுத்தம் மட்டுமே மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய வாகன நிறுத்த ஒப்பந்தமானது, 2023 அக்டோபர் மாதத்தில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, சாலைகளில் வாகன நிறுத்தத்தை மேலும் திறம்பட மேற்கொள்வதற்கு மண்டல வாரியாக 3 தனித்தனி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
முதற்கட்டமாக பன்னடுக்கு வாகன நிறுத்தக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சென்னை மாநகரில் திருவொற்றியூர் நகராட்சி-வணிக வளாகக் கட்டடம், திருவொற்றியூர் நகராட்சி-மருந்தகக் கட்டட வளாகம், புல்லா அவென்யூ-பழைய வளாகம், ஈ.வெ.ரா. சாலையில் ஈகா திரையரங்கம் எதிரில் உள்ள வளாகம், ராஜா அண்ணாமலைபுரம் காம்ப்ளக்ஸ், சி.பி. ராமசாமி சாலையில் உள்ள வளாகம், டாக்டர் நாயர் சாலை பழைய காம்ப்ளக்ஸ், என்.எஸ்.கே. சாலை-கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், ஆற்காடு சாலை-வளசரவாக்கம் மண்டல அலுவலகம், அடையாறு மண்டலம்-இந்திரா நகர், 3ஆவது அவென்யூ சாலையில் உள்ள வணிக வளாகம் ஆகிய 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வாகன நிறுத்த இடங்களுக்கு சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது வாகன நிறுத்த மேலாண்மைக் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது. மேலும், நகரின் வாகன நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமலாக்க உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக் குழுமத்தால் வாகன நிறுத்தக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள அனைத்து சவால்களும், வாகன நிறுத்தக் கொள்கையில் தீர்வு காணப்படும்” என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு