சென்னை: வங்கக்கடடில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நகர் பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரண்டு நாட்களாக வீடுகளிலேயே முடங்கினர். டிசம்பர் 5ஆம் தேதி புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னையில் மழை ஓய்ந்தது. இதனை அடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியத் துவங்கியது.
ஆனால் பல இடங்களிலும் மழை நீர் வடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தபடி அப்படியே உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மழை நீரில் பல நூற்றுக்கணக்கான கார்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தாம்பரம் அடுத்த முடிச்சூர், அமுதம் நகர், வரதராஜபுரம் பகுதிகளில் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. வண்டலூர் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து இன்னும் துவங்கப்படாத நிலையில் வெளிவட்ட சாலையின் இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் கார்களை வரிசையாக நிறுத்தியுள்ளனர்.
மழை வரும் என தெரிந்து முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைத்த கார்களும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மழை நின்று இரண்டு நாட்களாகியும் தண்ணீர் வடிய வழிவகை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனம், சமூக ஆர்வலர்கள் என பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், முடிச்சூர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் தற்போது ஆங்காங்கே ஒதுங்கியுள்ளன.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் தாக்கம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!