சென்னை: இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமை புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் (செப்.28) வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று (செப்.30) நண்பகல் அவரது உடல் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, காவல்துறை மரியாதையுடன் தரமணியில் இருந்து வாகனம் மூலமாக சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது.
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை: அதைத் தொடர்ந்து, பெசண்ட் நகர் மின்மயானத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக 10 காவலர்கள் தலா 3 முறை துப்பாக்கியால் வான் நோக்கி சுட, மொத்தம் 30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்கள் சௌமியா, மதுரா, நித்யாராவ் உள்ளிட்ட குடும்பத்தினர், கேரள அமைச்சர்கள் கிருஷ்ணன் குட்டி, பி.பிரசாத், தெலங்கானா அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷணன் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு கேரள அமைச்சர்கள், வேளாண் துறை அமைச்சர் பி.பிரசாத், மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா, “எம்.எஸ்.சுவாமிநாதன் போற்றுதலுக்கு உரிய பெரும் வேளாண் விஞ்ஞானி ஆவார். இந்திய வேளாண் துறையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தவர். தனிப்பட்ட முறையில் அவருடன் நெருக்கமாக பழகி இருக்கிறேன்.
அவருடைய இழப்பு என்பது நமக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். பெரும் மரியாதைகளையும், வணக்கங்களையும் என் சார்பில் தெரிவிக்கிறேன். பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தமிழகத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் செய்தவர் அவர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மதுரை மக்களே இதை கொஞ்சம் கவனிங்க... மதுரை ரயில்களின் நேரம் மாற்றம்!