இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி மேலும் கூறியதாவது, " ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார், அரசு மருத்துவமனைகளின் நிலைமை. இதுதான் அபாய கட்டத்தின் ஆரம்பம்.
“ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு நாளை (மே 7) வரை மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு அடுத்த நாள் (மே 8) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம்” என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்துக்கழக நிர்வாக இயக்குநர் உமாநாத் தெரிவித்துள்ளார். இது தான் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை.
கேரளாவில் உள்ள கஞ்சிக்கோட்டில் இருந்து தென்தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த 40 டன் ஆக்ஸிஜன் மத்திய அரசின் புதிய உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அதனை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது. நமது ஆக்ஸிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரித்த நிலையிலும், மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தி தர மறுக்கிறார்கள். நிலைமை அனைத்து வகையிலும் கை மீறிக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசிடமிருந்து நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுகின்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இப்பொழுது உடனடித்தேவை போர்கால அடிப்படையிலான மேலாண்மைத்திறன். ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குப் படுக்கைகளை உறுதிப்படுத்துவது, ஆக்ஸிஜன் தேவைப்படாத நோயாளிகளை ஆக்ஸிஜன் படுக்கையில் இருந்து மாற்றுவது, கூர்மையான மருத்துவக் கண்காணிப்பின் அடிப்படையில் இப்பணியை செய்தால் நம்மால் பலரின் உயிரை இந்த அபாயக் கட்டத்திலும் காப்பாற்ற முடியும்.
மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துப் பணியாற்ற வேண்டும். நாளை பொறுப்பேற்கப்போகும் நம் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ அவசர நிலை உள்ளதால் கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சிறு அசைவும், செயல்களும் மனித உயிர்களைக் காக்கும் பொறுப்பினை பெற்றிருக்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம் என்றார்.