சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர்.31ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான பெண் காவலரிடம், அக்கூட்டத்தில் இருந்த இரண்டு திமுக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறவே பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதனைக் கண்ட அருகிலிருந்த காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரு திமுக நிர்வாகிகளை கையும் களவுமாகப் பிடித்தார்.
இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திமுக 129ஆவது வட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த பிரவீன் (23) மற்றும் ஏகாம்பரம் (24) என்பதும் தெரியவந்தது. இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம்: மேலும் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கவுன்சிலர் ஆகியோர் ஆய்வாளரிடம் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என சமரசம் செய்ததால் வழக்குப் போடாமல் இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் திமுக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் கோயம்பேடு துணை ஆணையர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், எந்த நோக்கமும் இல்லை எனவும் கூறி பெண் காவலரிடம் மன்னிப்புக்கேட்டு திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர். மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது.
'காவல் துறை கை கட்டப்படாமல் இருந்தால்தான் பெண்கள் சாலையில் நடக்க முடியும்': இந்நிலையில் தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் (ஜன. 2) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,“சென்னையில் கனிமொழி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை திமுகவின் இளைஞரணியில் இருக்கக்கூடிய இருவர் துன்புறுத்தல் செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய சென்ற காவலர்களையும் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு பெண் காவலர் மீது கை வைத்த அயோக்கியன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சர் மூச்சுக்கு 300 முறை இது திராவிட மாடல், இது திராவிடம் மாடல் அரசு என்று சொல்கிறார். திமுகவுக்கு வெட்கம், மானம் இல்லை. காவல்துறை நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் நன்றாக இருக்க முடியும். காவல்துறை கை கட்டப்படாமல் இருந்தால்தான் பெண்கள் சாலையில் நடக்க முடியும். கனிமொழி இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது சம்பவம் நடந்தால் மைக் போட்டு பேசுவார்.
மத்தியப்பிரதேசத்தில் நடந்தாலும் பேசுவார், ராஜஸ்தானில் நடந்தாலும் பேசுவார். உங்கள் கூட்டத்தில் ஒரு காவல் துறை சகோதரிக்கு நடந்திருக்கிறது. இது குறித்துப் பேச வேண்டும். உங்கள் சகோதரர் தான் ஆட்சியில் இருக்கிறார். இதைக் கூட செய்யவில்லை என்றால், இந்த ஆட்சி எதற்காக இருக்கிறது என்பது எனது கேள்வி” என பேசியிருந்தார்.
நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்: இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் அத்துமீறியது உண்மை என தெரியவந்ததால், மீண்டும் பெண் காவலரிடம் புகார் பெறப்பட்டு திமுக நிர்வாகிகளான பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர்.
'அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்?' : இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொச்சியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், 'விருகம்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
நான் அந்த நேரத்தில் கூட்டத்தில் இல்லை. கூட்டம் முடிந்த பின் நடந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நடந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது. இதனால் தான் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மற்றவர்களை குறை சொல்லும் அண்ணாமலை பற்றி அவரது கட்சியில் இருந்த அம்மையார் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகிய சரவணன் அதிமுகவில் ஐக்கியம்!